பொதுமக்களின் குறைதீர் மனுக்கள் அரசு உத்தரவின்படி கையாளப்படுகிறதா? தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
பொதுமக்கள் அளிக்கும் குறைதீர் மனுக்கள் அரசு உத்தரவின்படி கையாளப்படுகிறதா? என்பது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-;
மதுரை,
அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக கொடுத்துவிட்டு, தீர்வுக்காக பல வருடங்களாக காத்திருக்கும் அவல நிலை உள்ளது. இதை தடுக்க பல்வேறு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. குறைதீர் மனுக்கள் மீது அதிகபட்சம் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என நிர்வாக சீர்திருத்த துறையால் 2015-ம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் 2018-ம் ஆண்டில் இருந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கொடுக்கும் மனுவுக்கு உரிய எண் வழங்கப்பட வேண்டும். மனு கொடுக்கப்பட்டது தொடர்பாக ஒப்புகை சீட்டு அளிக்க வேண்டும்.
மனுவின் விவரங்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை கணினியில் பதிவு செய்யப்பட வேண்டும். மனு கொடுத்தவர், அது தொடர்பான விவரங்களை கணினியின் மூலம் அறிந்து கொள்ள வழிவகை செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த அரசாணைகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறாமல் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே குறைதீர்க்கும் மனு தொடர்பாக 2018-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தீவிரமாக அமல் படுத்தவும், அதனை உறுதிசெய்ய மாநில அளவில் ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.
மாவட்ட அளவில் முதன்மை நீதிபதி, கலெக்டர் மற்றும் அதிகாரிகளைக்கொண்ட குழு அமைக்கவும், இந்த உத்தரவு தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உத்தரவை நிறைவேற்ற தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில், பொதுமக்கள் அளிக்கும் குறைதீர் மனுக்களை கையாளுவது தொடர்பான அரசு உத்தரவை நடைமுறைப்படுத்தியது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை செப்டம்பர் 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.