மாநகராட்சிக்கு நல்ல பெயர் கிடைக்க மக்கள் பிரச்சினைகளை ஒருங்கிணைந்து தீர்க்க வேண்டும் அதிகாரிகளுக்கு, பெங்களூரு மேயர் வேண்டுகோள்

மாநகராட்சிக்கு நல்ல பெயர் கிடைக்க மக்கள் பிரச்சினைகளை ஒருங்கிணைந்து தீர்க்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பெங்களூரு மாநகராட்சி மேயர் கங்காம்பிகே வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2019-08-21 22:30 GMT
பெங்களூரு, 

மாநகராட்சிக்கு நல்ல பெயர் கிடைக்க மக்கள் பிரச்சினைகளை ஒருங்கிணைந்து தீர்க்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பெங்களூரு மாநகராட்சி மேயர் கங்காம்பிகே வேண்டுகோள் விடுத்தார்.

ஆலோசனை

பெங்களூரு நகரில் உள்ள சாலை பள்ளங்களை சரிசெய்வது, கட்டிட கழிவுகளை அகற்றுவது, நடைபாதையை மேம்படுத்துவது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து நேற்று பெங்களூரு மாநகராட்சி மேயர் கங்காம்பிகே பெங்களூரு மேற்கு, கிழக்கு மண்டல அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகள், என்ஜினீயர்கள், காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின்பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மேயர் கங்காம்பிகே பேசும்போது கூறியதாவது:-

மாதிரி வார்டுகளாக...

பொதுமக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அவர்கள் கேள்விகள் கேட்பது மக்கள் பிரதிநிதிகளையும், மாநகராட்சி கமிஷனரையும் தான். அதிகாரிகளை யாரும் கேள்வி கேட்பது இல்லை. ஒவ்வொரு உதவி செயற்பொறியாளர்களும் ஒரு வார்டை கண்காணித்து வருகிறீர்கள். இதனால் வார்டில் நிலவும் பிரச்சினைகள் பற்றி அறிந்து கொண்டு இருப்பீர்கள். இந்த பிரச்சினைகளை பட்டியலிட்டு உயர் அதிகாரிகளுக்கு வழங்க அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணியில் யாரும் அலட்சியம் காட்டக்கூடாது. மாநகராட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும் வகையில் அனைவரும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க ஒருங்கிணைந்து செயல்பட்டு மாதிரி வார்டுகளை உருவாக்க வேண்டும். இதை செய்யாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உங்களின் (அதிகாரிகள்) பணிகளை அனைவரும் சரியாக செய்யவேண்டும். இல்லாவிட்டால் பணி இடமாற்றம் பெற்று கொண்டு சென்று விடுங்கள்.

கேபிள் வயர்கள் அகற்றம்

வளர்ச்சி பணிகள் பற்றிய விவரங்களை கட்டாயமாக வார்டு கவுன்சிலர்கள், உதவி என்ஜினீயர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் எந்த பணியையும் மேற்கொள்ள கூடாது.

சாலை சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்ளும்போது தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். இதுபற்றி ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். நடைபாதை சேதம் அடைந்து இருந்தால் அதை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மரம், மேம்பாலம், மின்கம்பங்களில் சுற்றப்பட்டு இருக்கும் கேபிள் வயர்களை அகற்றும் பணியை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் இதற்காக பணியாளர்களை நியமித்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்