சூலூர் போலீஸ் நிலையம் அருகே பரபரப்பு, டிரைவரை கத்தியால் குத்தி காரை கடத்திய வாலிபர் கைது
சூலூர் போலீஸ் நிலையம் அருகே டிரைவரை கத்தியால் குத்தி காரை கடத்திய வாலிபரை சினிமா பாணியில் போலீசார் விரட்டி சென்று கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
சூலூர்,
கோவை சிங்காநல்லூர் இடையன்வலசு பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 35). இவர் கால் டாக்சி ஓட்டி வருகிறார். இந்த நிலையில் வசந்தகுமார் சூலூர் அருகே தனது காரை நிறுத்தி வைத்திருந்தார். நேற்று அதிகாலை 2 மணிக்கு அங்கு வந்த 2 வாலிபர்கள் “நாங்கள் மதுரைக்கு செல்ல வாடகைக்கு கார் வேண்டும்” என்று கூறியுள்ளனர். இதையடுத்து அந்த 2 வாலிபர்களையும், வசந்த குமார் தனது காரில் அழைத்து கொண்டு மதுரை நோக்கி சென்றார். திருச்சி ரோடு டி.இ.எல்.சி. தேவாலயம் அருகே கார் சென்றபோது, அங்குள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வேண்டும் என்றும், எனவே காரை நிறுத்தும்படி காரில் பயணம் செய்த வாலிபர்கள், டிரைவர் வசந்தகுமாரிடம் கூறினர்.
இதையடுத்து சூலூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள பொதுத்துறை வங்கி ஏ.டி.எம். அருகே வசந்தகுமார் காரை நிறுத்தியுள்ளார். உடனே காரில் இருந்த வாலிபர்களில் ஒருவர் பணம் எடுக்க செல்வது போல, காரைவிட்டு கீழே இறங்கி சென்றுள்ளார். அப்போது காரில் இருந்த மற்றொரு வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் டிரைவர் வசந்த குமாரை குத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார்.
ஆனால் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் யாருக்கும் வசந்தகுமாரின் அலறல் சத்தம் கேட்கவில்லை. ரத்தம் பீறிட்டு வெளியேறிய நிலையில் காரில் சரிந்த அவரை அந்த வாலிபர்கள் கீழே தள்ளிவிட்டு காரை அங்கிருந்து கடத்தி சென்றனர். இதனால் சுதாரித்து கொண்ட வசந்தகுமார், கத்திக்குத்து காயங்களுடன் வலியால் துடித்தாலும், தான் வைத்திருந்த செல்போன் மூலம் நடந்த சம்பவத்தை உடனடியாக கோவை மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் கோவை மாவட்ட அனைத்து சோதனைச்சாவடிகளுக்கும், திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காரை கடத்தி சென்றவர்களை கண்டுபிடிக்க திருப்பூர் உதவி கமிஷனர் (மத்திய குற்றப் பிரிவு) சுந்தரராஜன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா தலைமையில் போலீசார் கொண்ட தனிக்குழு ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டது.
அப்போது திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் ரோட்டில் உள்ள சந்திராபுரம் சோதனைச் சாவடியில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தெரிவிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட பதிவு எண் கொண்ட கார் வந்து கொண்டிருந்தது. இதைபார்த்ததும் அங்கு பணியில் இருந்த போலீசார் அந்த காரை நிறுத்தும் படி சைகை காட்டினார்கள். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து ரோந்து பணியில் இருந்த திருப்பூர் தெற்கு போலீசார் இருசக்கர வாகனத்தில் அந்த காரை துரத்தி சென்றனர். அப்போது அந்த கார் வேகமாக காங்கேயம் ரோட்டில் திருப்பூர் ஊரக போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிக்கு சென்றது. இதையடுத்து திருப்பூர் தெற்கு போலீசார், ஊரக போலீஸ் நிலையத்திற்கும், காங்கேயம் சோதனைச்சாவடியில் உள்ள போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
அங்கு தயார் நிலையில் நின்று கொண்டிருந்த போலீசாரும் அந்த காரை நிறுத்த முயற்சித்தனர். அங்கும் காரை நிறுத்தாமல் அந்த நபர்கள் வேகமாக ஓட்டி சென்றனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் தெற்கு மற்றும் ஊரக போலீசார் இணைந்து ரோந்து வாகனத்தில் அந்த காரை துரத்தினார்கள்.
சினிமா பாணியில் அந்த காரை துரத்தி சென்ற போலீசார் விஜயாபுரம் நல்லிக்கவுண்டன் நகர் பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். அப்போது அந்த கார் நிலைத்தடுமாறி ரோட்டின் தடுப்பு சுவரில் மோதியது. இதையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும், காரில் இருந்த 2 வாலிபர்களும் கதவை திறந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் துரத்தினார்கள். அதில் ஒரு வாலிபர் மட்டும் பிடிபட்டார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
போலீசாரிடம் சிக்கிய வாலிபரை, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் அந்தமான் நிகோபர் தீவை சேர்ந்த திருமுருகன் (வயது 19) என்றும், தப்பி ஓடியவரும் அதே தீவை சேர்ந்த கொங்குசாமி (25) என்பதும் தெரியவந்தது.
பிடிபட்ட திருமுருகன் மற்றும் அவருடைய நண்பரும் எதற்காக காரை கடத்தினார்கள்? இவர்கள் இருவரும் வேறு ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்தும், தப்பி ஓடியவர் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். இதையடுத்து திருமுருகன் சூலூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
சூலூரில் அதிகாலை நேரம் சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் வசந்த குமாருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.