தர்மபுரியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்ட முகாம்
தர்மபுரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்ட முகாம் நாளை தொடங்கி 30-ந்தேதி வரை நடக்கிறது.
தர்மபுரி,
தமிழகத்தில் உள்ள நகர வார்டுகள் மற்றும் கிராமங்களுக்கு நேரடியாக அலுவலர்கள் சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் சிறப்பு குறைதீர்வு திட்டத்தை செயல்படுத்த தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் அனைத்து வார்டுகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் பிறதுறை அலுவலர்களை கொண்ட குழுவினர் நேரில் சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுவார்கள். இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு ஒருவார காலத்திற்குள் அனுப்பி வைக்கப்படும். அந்த கோரிக்கை மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் உரிய தீர்வு எட்டப்படும். இதைத்தொடர்ந்து வருகிற செப்டம்பர் மாதத்தில் அமைச்சர்கள் தலைமையில் தாலுகா அளவில் விழாக்கள் நடத்தப்பட்டு பல்வேறு நலத்திட்ட பயன்கள் வழங்கப்படும். மக்களின் அடிப்படை தேவைகளுக்கான சாலைகள், தெருவிளக்குகள், மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படை தேவைகள் தொடர்பான கோரிக்கைகளுக்கும் இந்த விழாவின்போது தீர்வு காணப்படும். எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த சிறப்பு குறைதீர்வு திட்ட முகாமில் கலந்து கொண்டு தங்கள் குறைகள், கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை சம்பந்தப்பட்ட குழுக்களிடம் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.