குழாய் பதிப்பு திட்டத்தை தடுத்து நிறுத்தக்கோரி தமிழக உழவர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

இருகூர்-தேவனகுந்தி குழாய் பதிப்பு திட்டத்தை தடுத்து நிறுத்தக்கோரி தமிழக உழவர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2019-08-21 23:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், ராயக்கோட்டை தமிழக உழவர் முன்னணி சார்பில், இருகூர்-தேவனகுந்தி குழாய் பதிப்பு திட்டத்தை தடுத்து நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தூருவாசன் தலைமை தாங்கினார். ஆலோசகர் மாரிமுத்து கண்டன உரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:- இருகூர்-தேவனகுந்தி குழாய் பதிப்பு திட்டத்திற்காக ராயக்கோட்டை பகுதியில், ஒடையாண்டள்ளி, எச்சனஅள்ளி, எதிர்கோட்டை, ராயக்கோட்டை, பழையூர், நெல்லூர், சஜ்ஜலப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்கள் வழியாக விவசாயிகளின் நிலத்தில், பெட்ரோலிய நிறுவனம் குழாய் பதிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது ராயக்கோட்டை பகுதி விவசாயிகளின் ஒட்டு மொத்த வாழ்வாதாரத்தையும் அடுத்த தலை முறையின் எதிர்காலத்தையும் முழுவதும் அழிக்கும் செயலாகும்.

ஏற்கனவே இப்பகுதியில் கெயில் குழாய் பதிக்க நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அடுத்து தர்மபுரியில் இருந்து ராயக்கோட்டை வழியாக ஓசூர் வரை 6 வழிச்சாலைக்காக 240 அடி விவசாய நிலம் எடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரியில் இருந்து ஓசூருக்கு, கிருஷ்ணகிரி வழியாக 6 வழிச்சாலையும், ராயக்கோட்டை வழியாக இரண்டு வழிச்சாலையும் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், பெட்ரோலிய நிறுவனம் பெட்ரோலிய பொருட் களை கொண்டு செல்ல விவசாய நிலத்தை கையகப்படுத் துவதாக அறிவித்துள்ளது.

மற்ற மாநிலங்களில் உள்ளது போல் தமிழகத்திலும் இத்திட்டங்களை சாலை வழியாக கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இருகூர்- தேவனகுந்தி குழாய் பதிப்பு திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்