நடைபயிற்சி சென்றவரிடம் நகை பறித்த 2 பேருக்கு 7 ஆண்டு சிறை - அம்பை கோர்ட்டு உத்தரவு
நடைபயிற்சி சென்றவரிடம் தங்க நகை பறித்த 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து அம்பை கோர்ட்டு உத்தரவிட்டது.
அம்பை,
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள அகஸ்தியர்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 50). இவர், அந்த பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 25-3-2016 அன்று அம்பை- தென்காசி மெயின் ரோட்டில் செல்லப்பாண்டி நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் செல்லப்பாண்டியை வழிமறித்து நிறுத்தினார். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் செல்லப்பாண்டி அணிந்து இருந்த 6¼ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து செல்லப்பாண்டி அம்பை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நெல்லை பேட்டையை சேர்ந்த சமுத்திர பாண்டி மகன் பாஸ்கர் (30), தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சிவராமலிங்கம் (30) ஆகியோர் தங்கசங்கிலி பறித்துச் சென்றது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்த வழக்கு விசாரணை அம்பை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி பாஸ்கர், சிவராமலிங்கம் ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
வழக்கை நீதிபதி கவிதா விசாரித்து தீர்ப்பு கூறினார். தீர்ப்பில், 2 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கோமதி சங்கர் ஆஜராகி வாதாடினார்.