ஓய்வு வயது குறைப்பு கண்டித்து, பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓய்வு வயது குறைப்பு கண்டித்து பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி,
மத்திய அரசு பி.எஸ்.என்.எல். நிர்வாகத்துடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியதாகவும் அதில் பணி ஓய்வு பெறும் வயது 60 என்பதை 58 ஆக குறைப்பது என முடிவு செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை கண்டித்து ஆரணி, கொசப்பாளையம் சீனிவாசன் தெருவில் உள்ள பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன்பு ஊழியர் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் மாரிமுத்து, மற்றொரு ஊழியர் அமைப்பை சேர்ந்த பரசுராமன் ஆகியோர் தலைமையில் தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு 4ஜி அலைக்கற்றை, 5ஜி அலைக்கற்றை வரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு நடத்தும் பி.எஸ்.என்.எல்.நிறுவனத்துக்கு 2ஜி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனை அதிகப்படுத்தி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். ஓய்வு பெறும் வயதை 60 என தொடர்ந்து நீடித்திட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கிளைத் தலைவர் ஜி.ராஜேந்திரன், பொருளாளர் பெருமாள், பார்த்தீபன் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.