விவசாய கடனில் இடைத்தரகர்கள் மோசடி: கோத்தகிரியில் 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரி விசாரணை

விவசாய கடனில் இடைத்தரகர்கள் மோசடி செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து கோத்தகிரியில் 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரி விசாரணை மேற்கொண்டார்.

Update: 2019-08-21 22:45 GMT
கோத்தகிரி,

கோத்தகிரியில் பச்சை தேயிலை விவசாயம் நலிவடைந்து வந்ததை தொடர்ந்து, கொய்மலர் சாகுபடி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு தமிழக அரசு 50 சதவீத மானியம் வழங்கியது. இந்த மானியத்தோடு, வங்கி கடன் பெற்று தருவதாக விவசாயிகளிடம் இடைத்தரகர்கள் சிலர் கூறி நில ஆவணங்களை பெற்று உள்ளனர். பின்னர் கொய் மலர் சாகுபடிக்கு குடில் அமைத்து கொடுத்து, தரமற்ற விதைகளை வழங்கினர். மேலும் அந்த நில ஆவணங்களை காட்டி கடந்த 2012-ம் ஆண்டு முதல் வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்று, அந்த தொகையை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஊட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி, சி.பி.ஐ.-யிடம் புகார் அளித்தது. இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி இடைத்தரகர் ஒருவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரி சடகோபன் மற்றும் வங்கி அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் நடுஹட்டி, கன்னேரிமுக்கு, கொணவக்கரை, கெங்கரை, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றனர். பின்னர் வங்கிகளில் தாக்கல் செய்யப்பட்ட விவசாயிகளின் ஆவணங்களில் அடிப்படையில் உள்ள நிலங்களில் கொய்மலர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளதா? அல்லது தரிசாக விடப்பட்டு உள்ளதா? என்று விசாரணை நடத்தினர். பின்னர் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று கணினிகளில் உள்ள விவரங்களை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து 2-வது நாளாக நேற்று கக்குச்சி, ஜெகதளா, கேத்தி ஆகிய கிராமங்களில் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களுக்கு நோட்டீசு வழங்கினர். 

மேலும் செய்திகள்