அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மாநில அரசிடம் நிதி கோரப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்படும் கலெக்டர் அக்ரம் பாஷா தகவல்

ஹாசன் மாவட்டத்தில், மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மாநில அரசிடம் நிதி கோரப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று கலெக்டர் அக்ரம் பாஷா கூறினார்.

Update: 2019-08-21 21:30 GMT
ஹாசன், 

ஹாசன் மாவட்டத்தில், மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மாநில அரசிடம் நிதி கோரப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று கலெக்டர் அக்ரம் பாஷா கூறினார்.

ஆலோசனை கூட்டம்

ஹாசன் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா நேற்று தனது அலுவலகத்தில் ஹாசன் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் கலெக்டர் அக்ரம் பாஷா பேசும்போது கூறியதாவது:-

ஹாசன் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழை மற்றும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இதுவரை ரூ.594 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பேளூர், ஒலேநரசிப்புரா, அரக்கல்கோடு, ஹாசன் தாலுகா, அரிசிகெரே, சென்னராயப்பட்டணா ஆகிய பகுதிகளில் மழை, வெள்ள பாதிப்புகள் அதிக அளவில் உள்ளன.

இதுவரை மழை, வெள்ளத்திற்கு 4 பேர் பலியாகி உள்ளனர். 20 பேர் காயம் அடைந்துள்ளனர். பலியானவர்களின் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.16 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.26 ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது. 1,738 குடும்பங்களுக்கு ரூ.66.60 லட்சம் செலவில் அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

201 வீடுகள் முற்றிலும் இடிந்தன

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக 12 முகாம்கள் திறக்கப்பட்டன. அந்த 12 முகாம்களிலும் மொத்தம் 1,270 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் தலா ரூ.8 ஆயிரம் செலவில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மழை, வெள்ளத்தால் 495 ஹெக்டேர் அளவிற்கு விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 350 ஹெக்டேர் நிலங்கள் காபி தோட்டங்கள் மற்றும் நெற்பயிர்கள் ஆகும். இவை தவிர மாவட்டத்தில் 1,738 வீடுகள் மழை, வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. அவற்றில் 201 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளன.

முற்றிலும் இடிந்த வீடுகளுக்கு பதிலாக மாநில அரசு சார்பில் வேறு இடத்தில் வீடு கட்டித்தரப்படும் அல்லது ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். பாதியளவு வீடுகள் சேதமடைந்தவர் களுக்கு முதல்கட்டமாக தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல் கால்நடைகளை இழந்தவர்களுக்கும், வலைகள், பரிசல்களை இழந்த மீனவர்களுக்கும் தலா ரூ.60 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

நிவாரண உதவிகள் வழங்கப்படும்

இன்னும் மழை, வெள்ள பாதிப்புகளின் சேத மதிப்பு குறித்து முழுமையான அறிக்கை என்னிடம் வந்து சேரவில்லை. அதனால் அதிகாரிகள் விரைவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து முழுமையாக கணக்கிட்டு என்னிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னர் அந்த அறிக்கையின் அடிப்படையில் மாநில அரசிடம் நிதி கோரப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும். மேலும் சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கலெக்டர் அக்ரம் பாஷா கூறினார்.

மேலும் செய்திகள்