சுப்ரீம் கோர்ட்டில் மனு மீது விசாரணை தொடங்கவில்லை: தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் டெல்லி பயணம் அமித்ஷாவை சந்திக்க திட்டம்
சுப்ரீம் கோர்ட்டில் மனு மீது விசாரணை தொடங்காததால் ஏமாற்றம் அடைந்துள்ள தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் அமித்ஷாவை சந்திக்க டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பெங்களூரு,
சுப்ரீம் கோர்ட்டில் மனு மீது விசாரணை தொடங்காததால் ஏமாற்றம் அடைந்துள்ள தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் அமித்ஷாவை சந்திக்க டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
17 பேர் தகுதி நீக்கம்
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து பா.ஜனதா தலைவராக இருந்த எடியூரப்பா கடந்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
25 நாட்களுக்கு பிறகு கர்நாடக மந்திரிசபை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டது. சுயேச்சை எம்.எல்.ஏ. நாகேஷ் உள்பட 17 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். ராஜினாமா செய்த 15 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 17 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் உத்தரவிட்டார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 17 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நடவடிக்கையை நிறுத்தி வைத்தால்...
இந்த மனுவை தாக்கல் செய்து 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அந்த மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்னும் விசாரணை தொடங்கவில்லை. இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். சபாநாயகரின் நடவடிக்கையை நிறுத்தி வைத்தால் மந்திரி பதவியில் அமர்ந்துவிடலாம் என்று அவர்கள் கருதினர்.
இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பைரதி பசவராஜ், எஸ்.டி.சோமசேகர், கோபாலய்யா, சுதாகர் உள்ளிட்டோர் நேற்று பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். அவர்கள் டெல்லியில் தங்களின் வக்கீல் முகுல் ரோஸ்தகியை நேரில் சந்தித்து பேச உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் மனுவை விரைவாக விசாரணைக்கு எடுக்க முயற்சி மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள இருக்கிறார்கள்.
மந்திரி அஸ்வத் நாராயணா
இதற்கிடையே அவர்கள், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசவும் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்ய புதிய மந்திரி அஸ்வத் நாராயணா டெல்லி சென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுபற்றி கேட்டபோது, தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் கருத்து கூற மறுத்துவிட்டனர்.