தேவகோட்டை அருகே போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு; 2,500 மதுபாட்டில்கள் பறிமுதல்

தேவகோட்டை அருகே போலி மதுபான தொழிற்சாலையில் இருந்து 2,500 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-08-21 23:00 GMT
சிவகங்கை,

தேவகோட்டை அருகே உள்ள சங்கரபதிநகர் என்ற இடத்தின் அருகில் உள்ள ஒரு வீட்டில் போலி மதுபான தொழிற்சாலை செயல்படுவதாக சிவகங்கையில் உள்ள மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் உத்தரவின் பேரில் மதுவிலக்கு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் நித்தியபிரியா மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று காலை அங்கு திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோடினர். பின்னர் போலீசார் அங்கு சோதனை நடத்தியபோது அங்கு 2,544 போலி மதுபாட்டில்கள் 53 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அத்துடன் அங்கு மதுபானம் தயாரிக்க தேவையான எந்திரம் மற்றும் ரசாயன பவுடர், காலி பாட்டில்கள், மூடிகள், போலி லேபிள்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போலி மதுபாட்டில்கள் அனைத்தையும் போலீசார் வாகனத்தில் ஏற்றினர். மேலும் இந்த போலி மதுபான தொழிற்சாலையை நடத்தியது யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, தேவகோட்டையை சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 45) என்பவர் கடந்த 1½ மாதமாக அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து போலி மதுபாட்டில்கள் தயாரித்தது தெரியவந்தது. இவர் ஏற்கனவே திருப்பூர் பகுதியில் இதேபோன்று போலி மதுபாட்டில்கள் தயாரித்து போலீசில் சிக்கியதும் தெரியவந்தது.

சிவகங்கை மதுவிலக்கு போலீசார் தப்பியோடிய ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அவரை பிடித்து விசாரணை நடத்தினால்தான் இதேபோல் வேறு பகுதியில் போலி மதுபான தொழிற்சாலை நடத்தி வருகிறாரா என்ற முழுவிவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்