அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கும் கட்சிதான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் - அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேட்டி

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கும் கட்சி தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

Update: 2019-08-21 23:30 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நியாயமானவர் என்றால் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும். மறைந்த ஜெயலலிதா மீது வழக்குப்போட்டு சட்டம் பேசியவர் தான் சிதம்பரம். சிதம்பரம் ஏன் பயப்பட வேண்டும்.

நீதிமன்றத்தில் அவர் நியாயத்தை நிரூபிக்கலாமே. சட்டம் தன் கடமையை செய்து வருகிறது. அதில் ப.சிதம்பரம் என்றால் என்ன? பாமர மக்கள் என்றால் என்ன? அனைவரும் ஒன்றுதான். ஆவின் பால் விவகாரம் குறித்த பேச்சில் எனக்கும் முதல்-அமைச்சருக்கும், எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

லஞ்சம், ஊழலை மறைக்கவே அ.தி.மு.க. மாவட்டங்களை பிரிப்பதாக மு.க. ஸ்டாலின் கூறுகிறார். மு. க.ஸ்டாலின் தன்னை ஒருமுறை திரும்பி பார்க்க வேண்டும். திருக்குவளையில் இருந்து 4 ரூபாய் கொடுத்து ரெயிலில் வரமுடியவில்லை என கருணாநிதி தனது சுயசரிதையில் எழுதியுள்ளார். தற்போது அவர்களுக்கு எவ்வளவு சொத்து உள்ளது. மு.க.ஸ்டாலின் அவரது சொத்து குறித்து விளக்கம் தெரிவித்த பின் எங்கள் மீது புழுதிவாரி தூற்றட்டும்.

டி.டி.வி. தினகரனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் ஒரு குழு மட்டுமே உள்ளது. அந்த குழுவும் கலைந்து விட்டது என்றால் அவருக்கு வேலை முடிந்துவிட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் தான் ஆட்சி அமைக்கும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாக தெரிகிறது. எங்களோடு கூட்டணி வைக்கும் கட்சிகள் தான் மத்தியில் ஆட்சிக்கு வரமுடியும். எங்களோடு சேர்ந்தவர்கள் தான் பலமாகவும், வளமாகவும் இருக்க முடியும்.

இந்திய பிரதமரை பார்த்து பாகிஸ்தான் பிரதமர் மிரட்டுகின்ற தோணியில் பேசுகிறார். அதை கைதட்டி, ஆரவாரம் செய்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இந்திய இறையாண்மைக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை கைது செய்ய வேண்டும். எந்த கட்சி போராடினாலும் அந்த கட்சியை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா முத்தையா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்