வானவில் : மிகவும் மெல்லியதான பர்சனல் கம்ப்யூட்டர் ‘யோகா ஏ940’
லெனோவா நிறுவனம் வெளியிட்டுள்ள டெஸ்க்டாப் பர்சனல் கம்ப்யூட்டர் யோகா ஏ940 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் திகழும் சீனாவைச் சேர்ந்த லெனோவா நிறுவனம் மிகவும் மெல்லியதான பர்சனல் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே யோகா எஸ்940 சீரிஸில் இந்நிறுவனம் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்துள்ளது. தற்போது வெளிவந்துள்ள டெஸ்க்டாப் பர்சனல் கம்ப்யூட்டர் மிகவும் மெல்லியதானது. இது யோகா ஏ940 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டெஸ்க் டாப் மாடல் விலை ரூ.1,69,990.
ஸ்மார்ட்போனில் வெளிவந்துள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் தாங்கள் பயன்படுத்தும் அனைத்து மின்னணு கருவிகளிலும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. அத்துடன் முகத்தின் உருவ அடையாளத்தை வைத்து செயல்படுதல், குரல் வழி உத்தரவின்படி செயல்படுதல் உள்ளிட்ட அம்சங்களும் இதில் உள்ளன. 27 அங்குல தொடு திரை 4 கே டிஸ்பிளே கொண்டது.
இதில் திரையில் எழுதுவதற்கு ஏற்ப ஸ்டைலஸ் பென் உள்ளது. இதனால் திரையில் எழுதவும், வரையவும் முடியும். இதற்கேற்ப இதில் அடோப் இல்லஸ்ட்ரேட்டர், போட்டோஷாப், லைட்ரூம் உள்ளிட்ட சாப்ட்வேர்கள் உள்ளன. இனிய இசையைக் கேட்க இதில் டால்பி அட்மோஸ் சவுண்ட் சிஸ்டம் உள்ளது. உங்கள் முகம்தான் கம்ப்யூட்டரின் திறவுகோல். அந்த வகையில் இதில் செயற்கை நுண்ணறிவு நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கம்ப்யூட்டர் பட்டனை அழுத்தி, பாஸ்வேர்டை செலுத்த வேண்டிய அவசியமே ஏற்படாது. இதில் 8-வது தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் உள்ளது.
இது அதிவிரைவான செயல்பாட்டுக்கு வழிவகுக்கிறது. கூடுதல் இணைப்பாக வயர்லெஸ் சார்ஜிங் பேட் உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய வசதியாக இத்துடன் கிடைக்கிறது. இதில் கீபோர்ட் , மவுஸ் ஆகியவை இடத்தை அடைத்துக் கொள்ளாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் உங்கள் டேபிள் பார்ப்பதற்கே மிகவும் அழகாக காட்சி தரும்.
இது 1 டெரா பைட் நினைவகம் கொண்டது. இதை 2 டெராபைட் வரை விரிவாக்கம் செய்யும் வசதியும் உள்ளது.