சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 144 தொகுதிகள் ஒதுக்க தயார் பிரகாஷ் அம்பேத்கர் அறிவிப்பு

வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 144 தொகுதிகள் ஒதுக்க தயார் என பிரகாஷ் அம்பேத்கர் அறிவித்து உள்ளார்.

Update: 2019-08-20 23:30 GMT
மும்பை, 

வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 144 தொகுதிகள் ஒதுக்க தயார் என பிரகாஷ் அம்பேத்கர் அறிவித்து உள்ளார்.

காங்கிரசுக்கு அதிர்ச்சி

நாடாளுமன்ற தேர்தலில் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடி தனித்து போட்டியிட்டது. மாநிலத்தில் உள்ள 48 தொகுதியிலும் களம்கண்ட அக்கட்சி சுமார் 41 லட்சம் ஓட்டுகளை பெற்று இருந்தது. அந்த கட்சி பிரித்த ஓட்டுகளால் பல தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். இதையடுத்து விரைவில் நடைபெற உள்ள மாநில சட்டசபை தேர்தலில் பிரகாஷ் அம்பேத்கருடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் விரும்பியது.

ஆனால் பிரகாஷ் அம்பேத்கர் காங்கிரஸ் எங்களுடன் கூட்டணி சேர்ந்தால் அவர்களுக்கு 40 தொகுதிகளை ஒதுக்க தயாராக உள்ளோம் என அதிர்ச்சி அளித்தார்.

144 தொகுதிகள் ஒதுக்க தயார்

இந்தநிலையில் அவர் வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு 144 தொகுதிகள் ஒதுக்க தயராக உள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

தற்போது காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சிக்கு 144 தொகுதிகளை ஒதுக்க நாங்கள் தயாராக உள்ளோம். இது அவர்களுக்கு நல்ல வாய்ப்பு. இது தொடர்பாக காங்கிரஸ் விரைவாக முடிவு எடுக்க வேண்டும்.

இந்த மாத இறுதியில் வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளோம். அதன்பிறகு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். 288 தொகுதிகளிலும் எம்.ஐ.எம். கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்