சிதம்பரத்தில், குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 62 வீடுகள் இடித்து அகற்றம் - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
சிதம்பரத்தில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 62 வீடுகளை அதிகாரிகள் அதிரடியாக இடித்து அகற்றினர்.;
சிதம்பரம்,
சிதம்பரம் நகராட்சி பகுதிகளில் ஞானபிரகாசம், நாகசேரி, ஓமகுளம் உள்ளிட்ட குளங்களை பலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டி வசித்து வருகிறார்கள். தற்போது நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சிதம்பரம் நகராட்சி பகுதிகளில் உள்ள குளங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கனகசபை நகர் அருகே உள்ள ஞானபிரகாசம் குளத்தை ஆக்கிரமித்து 62 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இதில் குடியிருந்தவர்களை, அங்கிருந்து காலி செய்ய வலியுறுத்தி நகராட்சி சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நோட்டீசு வழங்கப்பட்டது. இதனால் சிலர் முன்கூட்டியே அங்கிருந்து காலி செய்ய தொடங்கினர்.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. இதையடுத்து நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா, தாசில்தார் ஹரிதாஸ், நகராட்சி ஆய்வாளர் சரவணகுமார், நகர அமைப்பு ஆய்வாளர் அங்கு பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. இதில் பொக்லைன் எந்திரத்தை கொண்டு குடிசை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகள் என்று மொத்தம் இருந்த 62 வீடுகளில் அனைத்து வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன.
அப்போது சில பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அங்கு வந்த சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனால் அவர்கள் சமாதானமடைந்தனர்.
தொடர்ந்து சப்-கலெக்டர் விசுமகாஜன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை பார்வையிட்டார். முன்னதாக துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சிதம்பரம் முருகேசன், புவனகிரி அம்பேத்கர், புதுச்சத்திரம் அமுதா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ஞானபிரகாசம் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் தற்போது அகற்றப்பட்டுள்ளது. இங்கு வசித்து வந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க ஏற்படு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு சார்பில் வீடு கட்டி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொடர்ந்து நாகசேரி, ஓமகுளம் ஆகிய குளங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட ஞானபிரகாசம் குளம் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் நடராஜர் கோவில் தெப்ப உற்சவம் இங்கு தான் நடைபெற்று வந்தது. ஆனால் ஆக்கிரமிப்பு, கழிவு நீர் கலப்பு போன்ற காரணங்களால் கோவில் தெப்ப உற்சவம் இங்கு பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து வந்தது. தற்போது குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதால், இனி வரும் நாட்களில் தெப்ப உற்சவம் நடைபெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.