நாட்டறம்பள்ளி அருகே சரஸ்வதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; சாலை துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி
நாட்டறம்பள்ளி அருகே சரஸ்வதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் சாலை துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
நாட்டறம்பள்ளி,
நாட்டறம்பள்ளி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக வறண்டு கிடந்த சரஸ்வதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நாயனசெருவு பகுதியில் இருந்து வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால், பெரிய ஆண்டவர் கோவில் அருகில் நாட்டறம்பள்ளி வெள்ளநாயக்கனேரிக்கு செல்லும் தார்சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். துண்டிக்கப்பட்ட சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணியம்பாடி, ஆலங்காயம், அம்பலூர், திம்மாம்பேட்டை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள சிறிய ஏரிகள் நிரம்பி வருகிறது. மேலும் திம்மாம்பேட்டை நாராயணபுரம் பகுதியில் உள்ள காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு வருகிறது. மேலும் ஆந்திர மாநில பகுதியில் பெய்து வரும் மழையால் தமிழக - ஆந்திர எல்லையில் புல்லூர் தடுப்பணை வேகமாக நிரம்பி வருகிறது, இதனை அப்பகுதி மக்கள் ஏராளமானோர் சென்று பார்த்து வருகின்றனர்.
வாணியம்பாடி நகர பகுதியிலும், ஆலங்காயம், உதயேந்திரம் பேரூராட்சி பகுதியிலும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தேங்கி கிடக்கும் மழைநீரை நகராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜோலார்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக இப்பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி பகுதியில் ஈஸ்வரன் கோவிலில் உள்ள குளம் 29 ஆண்டுகளுக்கு முன்பு நிரம்பி வழிந்தது. தற்போது இந்த குளம் நிரம்பி வழிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குன்னத்தூர் பகுதியில் உள்ள வண்ணாத்தி பாறை நீர்வீழ்ச்சியில் ஏலகிரிமலையில் பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து தண்ணீர் கொட்டுகிறது. இந்த நீர்வீழ்ச்சிக்கு வாணியம்பாடி, ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சென்று ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர்.
ஜோலார்பேட்டையை அடுத்த பால்னாங்குப்பம் கூட்ரோடு பகுதியில் மரம் சாய்ந்து மின்கம்பி மீது விழுந்து, மின்வயர்கள் அறுந்தது. இதனால் சந்தைகோடியூர், வக்கணம்பட்டி, பக்கிரிதக்கா உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் முற்றிலுமாக மின்சாரம் தடைபட்டது. அதன்பிறகு நேற்று காலை 8 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால் தொடர்ந்து 9 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர்.