திருவண்ணாமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் மனித சங்கிலி போராட்டம்; டாக்டர்கள் பங்கேற்பு
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் அரசு டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை,
அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
இதில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் 80 டாக்டர்கள் மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர் பணியிடங்களை அமல்படுத்த வேண்டும். பட்ட மேற்படிப்பில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும். நீட் தேர்வு, நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த போராட்டம் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் நடத்தப்பட்டது. இதனை டாக்டர்கள் சோஜி, பிரகாஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.