கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் மனிதசங்கிலி போராட்டம்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரியில் அரசு டாக்டர்கள் நேற்று மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தர்மபுரி மாவட்ட கிளை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு நேற்று மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகி லட்சுமி நரசிம்மன் தலைமை தாங்கினார்.
கூட்டமைப்பை சேர்ந்த அரசு டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர். அரசு மருத்துவக்கல்லூரி முதல் அரசு ஆஸ்பத்திரி வரை சாலையோரத்தில் கைகளை இணைத்தபடி நீண்ட வரிசையில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் பணியிடங்களை அரசாணைப்படி நிரப்ப வேண்டும். 13 ஆண்டுகள் பணிமுடித்த அரசு டாக்டர்களுக்கு தகுதிக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மருத்துவ பட்டமேற்படிப்பில் தமிழக அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அரசு பட்டமேற்படிப்பு படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வை நடத்த வேண்டும். மருத்துவ படிப்புகளுக்கான நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில் அரசு டாக்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை எதிரே ரவுண்டானா காந்தி சிலை செல்லும் சாலையில் நேற்று பிற்பகல் 12 மணியளவில் அனைத்து மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனித சங்கலி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமநாதன், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாவட்ட செயலாளர் சதீஷ், அரசு அனைத்து மருத்துவர்கள் சங்க செயலாளர் கோபி மற்றும் டாக்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.