நாமக்கல்லில் 24-ந் தேதி சட்டக்கல்லூரி திறக்கப்படும்: அமைச்சர் தங்கமணி பேட்டி

நாமக்கல்லில் வருகிற 24-ந் தேதி சட்டக்கல்லூரி திறக்கப்பட உள்ளது என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Update: 2019-08-20 22:15 GMT
நாமக்கல், 

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாமக்கல்லில் புதிதாக சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என சட்டசபை கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார். மேலும் தற்காலிகமாக நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள டான்சி காட்சியகத்தில் சட்டக்கல்லூரி செயல்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையொட்டி தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சட்டக்கல்லூரி அமைய உள்ள டான்சி காட்சியகத்தை நேற்று 2-வது முறையாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சட்டக்கல்லூரிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அமைச்சர் தங்கமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவே பால் விலை குறித்து ஸ்டாலின் பேசி வருகிறார். முதல்-அமைச்சர் அது குறித்து தெளிவாக விளக்கம் அளித்து உள்ளார். டாஸ்மாக் பணியாளர்கள் வேலை நேரத்தை குறைப்பது குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

நாமக்கல்லில் சட்டக்கல்லூரி வருகிற 24-ந் தேதி திறக்கப்பட உள்ளது. தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறப்பு விழாவிற்கு வருகை தர உள்ளார். இந்த ஆண்டு 3, 5 ஆண்டு படிப்புகளில் தலா 80 பேர் சேர்க்கப்படுவார்கள். அதற்கான கலந்தாய்வு நாளை (இன்று) தொடங்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்