நோயில் இறந்ததாக கூறப்பட்ட விவசாயி சாவில் திருப்பம்: விஷம் கொடுத்து கொன்ற மகன் கைது
நாமகிரிப்பேட்டை அருகே, நோய்வாய்பட்டு இறந்ததாக கூறப்பட்ட விவசாயி சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. விவசாயியை அவரது மகனே விஷம் கொடுத்து கொன்றதாக கைது செய்யப்பட்டார்.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள நாரைக்கிணறு குறவர் தெருவைச் சேர்ந்தவர் தனபால் (வயது 70). விவசாயி. இவரது மனைவி கனகாம்பாள் (60). இவர்களுக்கு வெங்கடேசன் (37) என்ற மகனும், செல்வி (42), செல்லம்மாள் (39) என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. தனபால் மற்றும் அவரது மனைவி கனகாம்பாள் இருவரும் மகன் வெங்கடேசன் வீட்டில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக முதியவர் தனபால் கடந்த 2 மாதங்களாக நோய்வாய்பட்டு படுக்கையில் இருந்து வந்தார். கடந்த 6-ந் தேதி அதிகாலையில் அவர் இறந்தார். அன்று மாலையே நாரைக்கிணறு பகுதியில் உள்ள இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையில் தனபாலின் மூத்த மகள் செல்வி, தனது தந்தையை தம்பி வெங்கடேசனின் மனைவி ராஜம்மாள் மற்றும் இவரது தம்பிகள் உள்பட 7 பேர் மதுவில் விஷத்தை கலந்து கொடுத்து கொன்று இருக்கலாம் என்றும், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும் ஆயில்பட்டி போலீசில் கடந்த 8-ந் தேதி புகார் அளித்தார். அதன்பேரில் தனபால் இறந்தது குறித்து ஆயில்பட்டி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையொட்டி ராசிபுரம் தாசில்தார் பாஸ்கர் முன்னிலையில், தனபாலின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அங்கேயே சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கோகுலரமணன் பிரேத பரிசோதனை செய்தார்.
இந்த நிலையில் இறந்த தனபாலின் மகன் வெங்கடேசன் மீது சந்தேகம் வரவே ஆயில்பட்டி போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது தனபால் வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் படுக்கையில் இருந்து வந்ததால், மூத்த அக்காள் செல்வியின் கணவர் நடராஜ் உதவியுடன் விஷம் வைத்து தந்தையை கொன்றதாக போலீசில் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து ஆயில்பட்டி போலீசார் ஏற்கனவே சந்தேக மரணம் என்று பதியப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி தனபாலின் மகன் வெங்கடேசனை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் அடைத்தனர்.
இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் நடராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மகனும், மருமகனும் சேர்ந்து விவசாயியை விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.