தென்பெண்ணை ஆற்றில் இருந்து கால்வாய் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப வேண்டும்: கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி பகுதி விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி,
சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட பீர்ஜேப்பள்ளி ஏரி, கொம்மேப்பள்ளி ஏரி, தேவசானப்பள்ளி ஏரி, சின்னபேட்டிகானப்பள்ளி ஏரி ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் உள்ள நீர் ஆதாரம் மூலம் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடைந்து வந்தன. ஆனால் சில ஆண்டுகளாக மழை பொய்த்து, இந்த ஏரிகளில் தண்ணீர் இன்றி வறட்சியால், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளை வளர்க்க முடியாமலும், குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த இன்னல்களை தடுக்கும் பொருட்டும், எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற, தென்பெண்ணை ஆற்றிலிருந்து கால்வாய் மூலம் ஆண்டிற்கு ஒரு முறை பீர்ஜேப்பள்ளி ஏரி உள்ளிட்ட ஏரிகளில் தண்ணீர் நிரப்பினால், 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பயன் அடையும். மேலும் 5 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் வசதி பெறும். குடிநீர் பிரச்சினை தீர்ந்து, கால்நடை வளர்ப்பும் நல்லமுறையில் இருக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்பதால், கடந்த 20 ஆண்டுகளாக இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டி கோரிக்கை வைத்து வருகிறோம். எனவே இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்து தென்பெண்ணை ஆற்றில் இருந்து கால்வாய் மூலம் எங்கள் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.