நாமக்கல்லில் டாக்டர்கள் மனிதசங்கிலி போராட்டம்

நாமக்கல்லில் டாக்டர்கள் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-20 21:30 GMT
நாமக்கல், 

அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாமக்கல்லில் நேற்று மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் லீலாதரன் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். இதில் அரசு டாக்டர்களுக்கு தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்க கோரியும், தமிழக அரசு மருத்துவர்களுக்கு பட்டமேற்படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவர் பணியிடங்களை கொண்டு வரவேண்டும் என்றும், அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கான பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். நாமக்கல் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி முன்பு நடைபெற்ற இந்த மனிதசங்கிலி போராட்டத்தில் அரசு டாக்டர்கள் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் ஏராளமான அரசு டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்