நெல்லையில் சாதிய படுகொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் புதிய போலீஸ் கமிஷனர் தீபக் எம்.டாமோர் பேட்டி
நெல்லையில் சாதிய படுகொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாநகர புதிய போலீஸ் கமிஷனர் தீபக் எம்.டாமோர் கூறினார்.
நெல்லை,
நெல்லையில் சாதிய படுகொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாநகர புதிய போலீஸ் கமிஷனர் தீபக் எம்.டாமோர் கூறினார்.
புதிய போலீஸ் கமிஷனர்
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த பாஸ்கரன் சென்னைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னையில் ரெயில்வே ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த தீபக் எம்.டாமோர் நியமிக்கப்பட்டார். புதிய போலீஸ் கமிஷனர் தீபக் எம்.டாமோர் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் நாகசங்கர் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து புதிய போலீஸ் கமிஷனர் தீபக் எம்.டாமோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாநகர பகுதியில் சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் நிலையங்களுக்கு வரும் புகார்களுக்கு உரிய மதிப்பு அளித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை மாநகர பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அதன் பிறகு ஆய்வு நடத்தி சாலைகளை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
சாதிய படுகொலைகள்
சாதிய மோதல்கள், சாதிய படுகொலைகள் நடப்பதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போக்குவரத்து விதிமுறை மீறல், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பு ஏற்று உள்ள தீபக் எம்.டாமோரின் பூர்வீகம் குஜராத் மாநிலமாகும். இவர் 2001-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று நாகப்பட்டினம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்றார். பின்னர் பதவி உயர்வு பெற்று சேலம், நாமக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் சூப்பிரண்டாகவும், ரெயில்வே துறையில் டி.ஐ.ஜி.யாகவும், ஐ.ஜி.யாகவும் பணியாற்றினார். தற்போது நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பு ஏற்று உள்ளார்.