நெல்லை அருகே சுய உதவிக்குழு பெண் காசாளர் விஷம் குடித்து தற்கொலை ரூ.10 லட்சத்தை வாங்கி ஏமாற்றிய காதலன் கைது
நெல்லை அருகே ரூ.10 லட்சத்தை வாங்கிய காதலன் பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியதால் சுய உதவிக்குழு பெண் காசாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை,
நெல்லை அருகே ரூ.10 லட்சத்தை வாங்கிய காதலன் பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியதால் சுய உதவிக்குழு பெண் காசாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சுய உதவிக்குழு காசாளர்
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் பருத்திகுளத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து. விவசாயி. இவருடைய மகள் பரமேசுவரி (வயது24). இவர் அந்த பகுதியில் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் ‘வாழ்ந்து காட்டுவோம்‘ என்ற பெயரில் சுய உதவிக்குழு நடத்தி வந்தார். அந்த குழுவிற்கு காசாளராகவும் இருந்து, அந்த பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் பணம் வசூல் செய்து வங்கியில் செலுத்தியும் வந்தார்.இந்த நிலையில் பரமேசுவரிக்கும், பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியை சேர்ந்த அந்தோணிராஜ் (28) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஒருவரையொருவர் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சுய உதவிக்குழுவினரிடம் வசூல் செய்து வங்கியில் செலுத்தக்கூடிய பணம் ரூ.10 லட்சம் பரமேசுவரியிடம் இருந்ததாம். அந்த பணத்தை கேட்ட அந்தோணிராஜ் 10 நாளில் திருப்பி தருவதாக பரமேசுவரியிடம் கூறினாராம். இதைத்தொடர்ந்து பரமேசுவரி தன்னிடம் இருந்த ரூ.10 லட்சத்தையும் அந்தோணிராஜிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை வாங்கிய அவர் திரும்ப கொடுக்காமல் பல நாட்கள் இழுத்தடித்து வந்தாராம்.
தற்கொலை
மகளிர் சுய உதவிக்குழுவினர் தாங்கள் செலுத்திய பணத்தை எங்கே? என்று பரமேசுவரியிடம் கேட்டனர். உடனே பரமேசுவரி, அந்தோணிராஜிடம் பணத்தை கேட்டு உள்ளார். அதற்கு அவர் நான் உன்னிடம் பணம் வாங்கவில்லை என்று கூறிவிட்டாராம். இதனால் மனம் உடைந்த பரமேசுவரி நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பரமேசுவரியின் தந்தை சுடலைமுத்து கங்கைகொண்டான் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு பரமேசுவரியின் உடலை கைப்பற்றினார்கள். அப்போது அவர் எழுதி இருந்த கடிதத்தையும் கைப்பற்றினர்.
காதலன் கைது
இதுதொடர்பாக அந்தோணிராஜ் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் கங்கைகொண்டான் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.