பரமக்குடி அருகே கி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு

பரமக்குடி அருகே கி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Update: 2019-08-20 23:30 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, திருவாடானை துணை வட்டாட்சியர் ஆண்டி ஆகியோர் கலையூரில் கள மேற்பரப்பாய்வு செய்தனர். அப்போது அந்த ஊரில் உள்ள வில்லார் உடையார் அய்யனார் கோவிலில் உடைந்த நிலையில் இருந்த சமண தீர்த்தங்கரர் சிற்பத்தை கண்டெடுத்தனர்.

இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறியதாவது:-

கண்டுபிடிக்கப்பட்ட சிற்பம் 2 அடி உயரமும், 1½ அடி அகலமும் கொண்ட கருங்கல்லால் ஆனது. இச்சிற்பத்தில் அசோக மரத்தின் வளைந்த கிளைகளின் கீழ் பிரபாவளி என்னும் ஒளிவட்டம் உள்ளது. அசோக மரத்தின் கிளைகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. பிரபாவளியின் உள்ளே அமர்ந்த நிலையில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் இருந்திருக்க வேண்டும். தீர்த்தங்கரர் உருவம் இருந்த பகுதி முழுவதும் உடைத்து சிதைக்கப்பட்டுள்ளது.

இது சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரரான மகாவீரரின் சிற்பமாக இருக்கலாம். மேலும் இதன் காலம் கி.பி.10-ம் நூற்றாண்டாக கருதலாம். இக்கோவில் வளாகத்தில் மணற்பாறையில் செதுக்கப்பட்ட பூரணி, பொற்கலையுடன் காட்சி தரும் சிறிய அளவிலான அய்யனார் சிற்பம் ஒன்று மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளது. இது சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்.

திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டம், பொக்கனாரேந்தல் ஆகிய பகுதிகளிலும் இதுபோன்ற சமண தீர்த்தங்கரர்களின் உடைந்த சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் பொக்கனாரேந்தலில் உள்ள சிற்பம் மலைமேல் சாத்துடையார் என்ற அய்யனார் கோவில் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்