22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-20 22:15 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஏகாம்பரம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். மாநில செயலாளர் சார்லஸ் சசிக்குமார் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற வளர்ச்சித்துறை அலுவலர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும், உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு பெரிய கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும் என்பன உள்பட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் கேசவலு, சந்திரசேகரன், ஜெயசங்கர், சரவணன், ரங்கநாதன், இணை செயலாளர்கள் சிலம்புசெல்வன், ரங்கசாமி, விஜயகுமார், அய்யனார், வீரபத்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தண்டபாணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்