குடிமங்கலம் நால்ரோட்டில் எலக்ட்ரானிக் கடையின் பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சம் திருட்டு; மேலும் 3 கடைகளில் கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகள்

குடிமங்கலம் நால்ரோட்டில் எலக்ட்ரானிக் கடையின் பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இதே போல் மேலும் 3 கடைகளில் கைவரிசை காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-08-20 22:45 GMT
குடிமங்கலம்,

குடிமங்கலம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் சிவலிங்கசாமி. இவர் குடிமங்கலம் நால்ரோட்டில் எலக்ட்ரானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். வியாபாரம் முடிந்ததும் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சிவலிங்கசாமி சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலையில் அந்தவழியாக சென்றவர்கள் சிவலிங்கசாமி கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சிவலிங்கசாமி கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கடையில் வைத்து இருந்த ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் அங்கிருந்த மடிக்கணினி ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதே போல் இந்த கடைக்கு அருகில் உள்ள மளிகைக்கடை, ஹார்டுவேர்ஸ், அரிசி மண்டி ஆகிய கடைகளின் பூட்டையும் உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்று உள்ளனர்.

இது குறித்து குடிமங்கலம் போலீசில் சிவலிங்கசாமி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவம் நடந்த கடைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் மோப்ப நாய் டெவில் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய் சம்பவம் நடைபெற்ற கடையில் இருந்து சிறிது தூரம் வரை ஓடியது. பின்னர் மீண்டும் திருட்டு நடந்த கடைக்கே திரும்பிவந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

சம்பவத்தன்று இரவு சிவலிங்கசாமியின் கடைக்கு சென்ற மர்ம ஆசாமிகள் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்து பணம் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றையும், பக்கத்தில் உள்ள 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களையும் திருடி சென்று உள்ளனர்.

இதையடுத்து திருட்டு நடைபெற்ற கடைகள் அமைந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்கள், குடிமங்கலம் நால்ரோடு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகியுள்ளதா? என்று போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து நிறைந்த முக்கிய ரோட்டில் நடந்துள்ள திருட்டு சம்பவத்தால் குடிமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்