மனைவி கண் எதிரே, தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை - மேல்மலையனூரில் பரபரப்பு

மேல்மலையனூரில் மனைவி கண் எதிரே, கல்லால் அடித்து தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.;

Update: 2019-08-19 22:45 GMT
மேல்மலையனூர்,

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள வடபாலை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது 50). கூலித்தொழிலாளி. இருளர் இனத்தை சேர்ந்த இவர், மாந்திரீகம் செய்வதற்காக தனது மனைவி சித்ராவுடன்(45) நேற்று மதியம் மேல்மலையனூர் ஏரிக்கரையில் உள்ள கருடன் கிழங்கை வெட்ட சென்றார்.

அப்போது அங்கு வந்த மேல்மலையனூரை சேர்ந்த கலியமூர்த்தி மகன் தனசேகர்(34) என்பவர், முருகேசனிடம் ஏன் இங்கு வந்து கிழங்கு வெட்டுகிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தனசேகர், அருகில் கிடந்த கல்லை எடுத்து முருகேசனை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் அங்கேயே சரிந்து விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்ரா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முருகேசனை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தனசேகரை கைது செய்தனர். மனைவி கண் எதிரே தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்