உளுந்தூர்பேட்டை அருகே, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தீக்குளிப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

உளுந்தூர்பேட்டை அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தீக்குளித்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2019-08-19 22:30 GMT
உளுந்தூர்பேட்டை, 

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண். சம்பவத்தன்று இவர் புல் அறுப்பதற்காக அதே பகுதியில் உள்ள நிலத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அதே ஊரை சேர்ந்த ஏழுமலை மகன் ஷாருக்கான்(வயது 20) என்பவர், அந்த பெண்ணை அருகே உள்ள கரும்பு தோட்டத்துக்கு தூக்கிச்சென்று வாயில் துணி வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு தெரிந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அந்த பெண், வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் வலியால் அலறித்துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, அந்த பெண்ணின் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்