பட்டா பெற்ற மக்களுக்கு நிலம் வழங்காததை கண்டித்து - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தர்ணா

பட்டா பெற்ற மக்களுக்கு நிலம் வழங்காததை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-19 23:00 GMT
தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம், தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் மேக்கிழார்பட்டி, பால கோம்பை, ஆர வாரம்பட்டி, தெப்பம்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று வந்தனர்.

கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேக்கிழார்பட்டி, பால கோம்பை, ஆரவாரம்பட்டி, தெப்பம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு கடந்த 2002-ம் ஆண்டு அரசு விழாவில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால், 17 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த மக்களுக்கு நிலத்தை அளந்து கொடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தும் இடத்தை அளந்து கொடுக்காத நிலையில், நிலத்தை அளந்து கொடுக்காததை கண்டித்தும், பழைய பட்டாவுக்கு பதிலாக புதிய பட்டா வழங்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் 2 வார காலத்திற்குள் புதிய பட்டா வழங்கி, பயனா ளிகளுக்கு நிலம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தில், கட்சியின் மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ், மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்பு வடிவேல், நகர செயலாளர் ஈஸ்வரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்