ஓசூரில், மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு
தனியார் பள்ளியில் பழுது நீக்கும் போது மின்சாரம் தாக்கியதில் எதிர்பாராதவிதமாக எலக்ட்ரீசியன் ஒருவர் உயிரிழந்தார்.;
ஓசூர்,
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கோனேராஜபுரம் என்ற ஊரை சேர்ந்த அப்பாதுரை என்பவரது மகன் தீனதயாளன்(வயது 33). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தின்னூரில் குடும்பத்துடன் வசித்து வந்து, ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பழுது நீக்கும் பணியில் தீனதயாளன் ஈடுபட்டார். அப்போது அவரை எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தீனதயாளன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.