மோட்டார்சைக்கிள்கள் மீது கார் மோதி கட்டிட தொழிலாளி பலி - 2 பேர் படுகாயம்
மோட்டார்சைக்கிள்கள் மீது கார் மோதி கட்டிட தொழிலாளி பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் நாராயணப்பா (வயது 50). கட்டிட தொழிலாளி. இவரும், இவரது மனைவி நாராயணம்மாவும் (48) மோட்டார்சைக்கிளில் ஓசூர் ரிங் ரோடு மஞ்சுநாதா லே அவுட் பக்கமாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. மேலும் அருகில் சென்ற மற்றொரு மோட்டார்சைக்கிள் மீதும் மோதியது. இந்த விபத்தில் நாராயணப்பா, நாராயணம்மா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் நாராயணப்பா பரிதாபமாக இறந்தார்.
மேலும், படுகாயம் அடைந்த நாராயணம்மா ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதே போல மற்றொரு மோட்டார்சைக்கிளில் சென்ற ஓசூர் ஜூஜூவாடி நேதாஜி நகரை சேர்நத நவீன் (30) என்பவரும் படுகாயம் அடைந்தார். அவரும் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.