காஷ்மீர் விவகாரத்தில் தலையிட பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை: காதர் முகைதீன் பேட்டி

காஷ்மீர் விவகாரத்தில் தலையிட பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுக்கு உரிமை இல்லை என்று காதர் முகைதீன் கூறினார்.

Update: 2019-08-19 21:30 GMT
தென்காசி, 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீன் தென்காசியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட தயாராக உள்ளது. தற்போது தமிழகத்தில் மாவட்டங்களை பிரிப்பதை வரவேற்கிறோம். மாவட்டங்களை பிரித்தால் மட்டும் போதாது, உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு செயல்பட்ட விதம் அரசியல் சாசனத்திற்கு முரண்பாடானதாகும். மக்களின் உணர்வுகளை புறக்கணித்துவிட்டு ஜனநாயகத்தை மீறி காஷ்மீர் மக்களின் எண்ணங்களுக்கு எதிராக இது நடைபெற்று உள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூடி பேசி ஒரு தூதுக்குழுவை காஷ்மீருக்கு அனுப்பி அந்த மக்களுடன் கலந்து பேசி முடிவு எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதுதான் நியாயம்.

அங்குள்ள மக்களை சிறைவாசிகள் போல் வைத்துள்ளார்கள். அவர்களை விடுவிக்க வேண்டும். அவர்களிடம் பேச வேண்டும். ஆனால், இதே நேரத்தில் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தலையிடுவதற்கு உரிமை இல்லை.

இது இந்திய நாட்டின் உள்நாட்டு விவகாரம். இதில் குறுக்கிடுவதோ, ஐ.நா. சபைக்கு கொண்டு செல்கிறோம் என்பதோ தேவையில்லாத விஷயம் ஆகும். இதனை காரணம் காட்டி வேறு நாடுகள் படை எடுத்தாலும் அதனை முறியடிப்பதற்கு நாங்கள் முன்னணியில் இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போது பொருளாதாரத்தில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது. இந்த பொருளாதார சிக்கலை மறக்க வைப்பதற்காக மக்களை திசை மாற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. எவ்வளவுதான் மறைத்தாலும் இது அதிக நாள் நீடிக்காது. மக்கள் கிளர்ச்சி அடைந்தால் நாடு தாங்காது. எனவே, மக்களை மதித்து பொருளாதாரத்தை மேம்படுத்த ஆலோசனை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நவாஸ்கனி எம்.பி., முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ., மாநில பொருளாளர் ஷாஜகான், செயலாளர் நிஜாமுத்தீன், மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், செயலாளர் முகம்மது இக்பால், புளியங்குடி சாகுல் ஹமீது ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்