இடிந்து விழும் நிலையில் காந்திநகர் கிளை நூலக கட்டிடம் - நடவடிக்கை எடுக்க வாசகர்கள் கோரிக்கை
காட்பாடி காந்திநகரில் இடிந்து விழும் நிலையில் கிளை நூலக கட்டிடம் உள்ளது. இதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்பாடி,
காட்பாடி காந்திநகரில் அறிஞர் அண்ணா கிளை நூலகம் உள்ளது. இது, வேலூர் மாவட்ட மைய நூலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நூலகம் 4 ஆயிரத்து 244 சதுர அடி அளவுள்ள சொந்த இடத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த 36 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.
இங்கு, 35 ஆயிரத்து 771 நூல்களும், புரவலர்களாக 250 பேரும், வாசக உறுப்பினர்களாக 4 ஆயிரத்து 339 பேரும் உள்ளனர். இது, முழுநேர கிளை நூலகமாக இயங்கி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் அதிக புரவலர்களை கொண்ட கிளை நூலகம் இதுவாகும்.
1,488 சதுர அடியில் நாளிதழ் பிரிவு கட்டிடமும் மற்றும் நூல்கள் பிரிவுக்கு 2 கட்டிடங்கள் என மொத்தம் 3 கட்டிடங்கள் உள்ளன. இதில், நூல்கள் பிரிவு அறை சிதிலமடைந்து காணப்படுகிறது. கான்கிரீட் பூச்சு பெயர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் உள்ளது.
இந்தப் பகுதியில் பலத்த மழை பெய்யும்போது நூலக கட்டிடத்தில் மழைநீர் புகுகிறது. அதனால் நூலகங்கள் மழையில் நனைந்து சேதமடைகின்றன. எனவே புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள், வாசகர்கள், புரவலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் அவர்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான துரை முருகனிடம் முறையிட்டனர். அதைத்தொடர்ந்து அவர் நூலகத்தை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட பொதுப்பணித்துறை சார்பில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. 2018-19-ம் ஆண்டில் புதிய கட்டிடம் கட்ட ரூ.66 லட்சம் செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை புதிய கட்டிடம் கட்டுவதற்கான எந்தப் பணிகளும் தொடங்கவில்லை.
இதுகுறித்து கிளை நூலக வாசக வட்டத்தலைவர் பழனி கூறுகையில், ‘நூலக கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து விடும் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடத்தை மழைக்காலம் வருவதற்கு முன்பு உடனடியாக கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ. அல்லது மாவட்ட கலெக்டரின் சிறப்பு நிதியில் இருந்து கட்டிடம் கட்டி கொடுத்தால் வாசகர்கள் மிகவும் பயனடைவார்கள். நூலக கட்டிடம் இடிந்து விழுந்து, நூல்கள் சேதமடையும் முன்பு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.