குற்றாலத்தில் மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: தென்காசி கோர்ட்டு தீர்ப்பு

குற்றாலத்தில் மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

Update: 2019-08-19 22:30 GMT
தென்காசி,

நெல்லை மாவட்டம் குற்றாலம் வெண்ணமடை குளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 27), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.

சித்ரா இறந்து விட்டதால், கண்ணன் அதே பகுதியைச் சேர்ந்த குத்தாலம் (20) என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். குத்தாலம் பூப்படையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கண்ணனுக்கும், குத்தாலத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் கண்ணனின் குழந்தைகளை குத்தாலம் சரியாக கவனிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் கடந்த 14.2.2013 அன்று வீட்டில் வைத்து குத்தாலத்தை கட்டையால் அடித்துக் கொலை செய்தார். பின்னர் அவரது உடலை கயிற்றால் இறுக்கி உத்திரத்தில் தொங்கவிட்டார்.

இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். இதுதொடர்பாக தென்காசி கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார் தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதில் அரசு சார்பில் வக்கீல் ராமச்சந்திரன் ஆஜர் ஆனார்.

மேலும் செய்திகள்