முதியவரின் மொபட்டை திருடிச்சென்ற பெண் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியால் பரபரப்பு

கடை முன்பு சாவியுடன் நிறுத்தி இருந்த முதியவரின் மொபட்டை திருடிச் சென்ற பெண்ணை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-08-19 22:45 GMT
பூந்தமல்லி,

சென்னையை அடுத்த ஆலந்தூரைச் சேர்ந்தவர் நாகூர் மீரான்(வயது 65). நேற்று மதியம் இவர், தனது உறவினர்களை பார்ப்பதற்காக தனது மொபட்டில், பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடிக்கு வந்தார். கடையின் முன்பு மொபட்டை நிறுத்தி விட்டு, சாவியை எடுக்காமல் கடைக்குள் சென்றுவிட்டார்.

சிறிதுநேரம் கழித்து கடையில் இருந்து வெளியே வந்த நாகூர் மீரான், அங்கு நிறுத்தி இருந்த தனது மொபட் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், நாகூர் மீரான் தனது மொபட்டை கடைமுன்பு நிறுத்திவிட்டு, சாவியை எடுக்காமல் கடைக்குள் செல்கிறார். அந்த வழியாக மற்றொரு மொபட்டில் ஹெல்மெட் அணிந்தபடி வரும் பெண், இதனை கவனித்தபடி செல்கிறார்.

சிறிதுநேரம் கழித்து அதே பெண், நடந்துவந்து அக்கம் பக்கம் பார்த்துவிட்டு சாவியுடன் நிறுத்தி இருந்த நாகூர் மீரானின் மொபட்டை திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. தலையில் ஹெல்மெட் அணிந்தும், தோளில் பை மாட்டியும் நடந்து வரும் அந்த பெண், சுடிதார் அணிந்தபடி வருகிறார்.

பெண் ஒருவர், மொபட் திருட்டில் ஈடுபடும் காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்த நாகூர்மீரான் பூந்தமல்லி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

மேலும் அந்த பெண் ஓட்டிவந்த மொபட்டை எங்கு நிறுத்தினார்?, இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெண் ஒருவர் மொபட் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்