கோவை அருகே, காட்டு யானை மிதித்து டிரைவர் பலி

கோவை அருகே காட்டு யானை மிதித்ததில் டிரைவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-;

Update: 2019-08-19 23:15 GMT
துடியலூர்,

கோவையை அடுத்த கணுவாய் சஞ்சீவி நகரை சேர்ந்த மாசாணி என்பவரின் மகன் கணேசன் (வயது 27), அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது வீட்டிற்கும், வேலை செய்து வரும் நிறுவனத்துக் கும் 1 கி.மீ. தூரம்தான் உண்டு. இதனால் அவர் இரவில் வேலை முடிந்ததும் நடந்தே வீட்டிற்கு செல்வது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் இரவில் வேலை முடிந்ததும் தனது வீட்டிற்கு நடந்து சென்றார். கணுவாய்-பன்னிமடை ரோட்டில் இரவு 12 மணியளவில் தனது வீட்டின் அருகே வந்தபோது திடீரென்று அங்கு ஒற்றை காட்டு யானை வந்தது. அந்த யானையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கணேசன் அங்கிருந்து தப்பித்து ஓடினார்.

எனினும் அந்த யானை அவரை துரத்திச்சென்று, துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. பின்னர் காலால் அவரை ஓங்கி மிதித்தது. பின்னர் அங்கிருந்து பிளிறியபடி அந்த யானை வேறு இடத்துக்கு சென்றது. இதில் படுகாயம் அடைந்த கணேசன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த கணேசனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் கணேசன் பரிதாபமாக இறந்தார்.

தொடர்ந்து அந்த ஒற்றை யானை அங்கேயே முகாமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மீண்டும் அது குடியிருப்பு பகுதிக்கு வர வாய்ப்பு உள்ளதால், அதை வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என்று அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர். எனவே அங்கு கூடுதலாக வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் முகாமிட்டு, அந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் துரத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதற்கிடையில் இரவு நேரங்களில் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். காட்டு யானைகள் செல்லும் பாதைகளை பயன்படுத்த வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்