குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் குடிநீர் வசதி கேட்டு கலெக்டரிடம் மனு

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் குடிநீர் வசதி கேட்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2019-08-19 23:00 GMT
சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேலை வாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, விபத்து நிவாரணம், பசுமை வீடு, சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உதவித்தொகை, வங்கி கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், குடும்ப அட்டை, இலவச தையல் எந்திரம், மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 260 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.

திருப்புவனம் அருகே உள்ள டி.ஆலங்குளம் காலனி கிராம மக்கள் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் கடந்த 2½ ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் அவதியடைந்து வருகிறோம். மேலும் எங்கள் கிராமத்தில் இருந்த சிறு மின் விசை பம்பும் பழுதாகிவிட்டது. எனவே எங்களுக்கு புது ஆழ்துளை கிணறு அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இதேபோல் திருப்பத்தூர் அருகே உள்ள கருவேல்குறிச்சி கிராம மக்கள், தங்கள் கிராமத்திற்கு குடிநீர் மற்றும் சாலை வசதி, மின்வசதி செய்து தரும்படி மனு கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் அரசின் அனைத்து துறை அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்