பா.ஜனதா அங்கம் வகிக்கும் கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் - பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

பா.ஜனதா அங்கம் வகிக்கும் கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று திண்டுக்கல்லில் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2019-08-19 22:45 GMT
திண்டுக்கல்,

பா.ஜனதா கட்சியில் பல்வேறு கட்சியினர் இணையும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் போஸ், திருமலைபாலாஜி, மாவட்ட செயலாளர் தனபாலன், நகர தலைவர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதா கிருஷ்ணன், மாநில வர்த்தகர் பிரிவு தலைவர் ராஜகண்ணன் கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் தி.மு.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களும், முஸ்லிம்கள் சிலரும் பா.ஜனதாவில் இணைந்தனர். அவர் களை பொன் ராதாகிருஷ்ணன் சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் மாவட்ட பொது செயலாளர்கள் கனகராஜ், முத்துராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திரமோடியின் துணிச்சலான நடவடிக்கையால், தமிழ்நாட்டில் மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. இதனால் தமிழகத்தில் பா.ஜனதா வேகமாக வளருகிறது. தொழில் துறையில் புதிய மாற்றங்களை செய்தால் நெருக்கடி ஏற்படுவது இயல்பு தான். இது எந்த ஆட்சியாக இருந்தாலும் ஏற்படும். தற்போதைய பொருளாதார நெருக்கடி தற்காலிகமானது தான். நவீன தொழில்நுட்பத்துடன், சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத வகையில் வாகனங்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பா.ஜனதாவுக்கு புதிய மாநில தலைவர் பற்றி கட்சியின் தலைமை முடிவு செய்யும். சாதியை அடையாளப்படுத்த யாரும் கையில் கயிறு கட்டுவது இல்லை. சாதி அடையாளத்தை ஏற்படுத்த கயிறு கட்டினால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதேநேரம் நம்பிக்கையின் அடிப்படையில் அனைத்து மதத்தினரும் கயிறு கட்டுகிறார்கள். குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை அளிக்க கயிறு கட்டுகிறார்கள். கோவில் திருவிழாவுக்கு காப்பு கட்டுவார்கள். அது மக்களின் நம்பிக்கை ஆகும். அது கூடாது என்றால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?

பால் விலை உயர்வை பொறுத்தவரை உற்பத்தியாளர்களுக்கும் உரிய விலை கிடைக்க வேண்டும். எனவே, உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழகத்தை 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்துள்ளன. ஆனால், எதிர்பார்த்த அளவு தமிழ்நாடு முன்னேறவில்லை. அதிலும் தி.மு.க. செய்த தவறுகளை சரிசெய்ய நீண்ட காலம் ஆகும். அதை சரிசெய்வதை நோக்கி தமிழ்நாடு அரசு பயணிக்க வேண்டும்.

தமிழகத்தில் அடுத்து பா.ஜனதா அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியை பிடிக்கும். பெண்களின் உரிமை பற்றி பேசுபவர்கள் முத்தலாக் தடை சட்டத்தை எதிர்க்கிறார்கள். பல குடும்பங்களை சேர்ந்த பெண்கள் முத்தலாக் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மையினர் உரிமை என எந்த கட்சியும் பேசுவது இல்லை. சாதி, மத ரீதியாக பெண்களின் உரிமையை பிரிக்க கூடாது. எந்த சாதி, மதமாக இருந்தாலும் பெண்களுக்குரிய உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்