கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சிறு, குறு தொழிற்சாலைகள் - ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு
சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து உதிரிபாகங்களுக்கான ஜாப் ஆர்டர் குறைந்ததால் கோவையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
கோவை,
வடஇந்தியா மற்றும் சென்னையில் கார், வேன் மற்றும் கனரக வாகனங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இவற்றுக்கு தேவையான உதிரிபாகங்கள் கோவையில் தான் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. வாகனங்களுக்கான சிலிண்டர், கியர் பாக்ஸ், பிரேக் டிரம்ஸ், பிரேக் ஷூஸ், பேரிங்குகள், ஜாயிண்ட், கனெக்டிங் ராடுகள் உள்பட நூற்றுக்கணக்கான உதிரிபாகங்கள் கோவையில் தயாரிக்கப்படுகின்றன.
கோவை மற்றும் அதை சுற்றியுள்ள 100 பெரிய நிறுவனங்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் இவற்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. கோவையில் தயாரிக்கப்படும் வாகன உதிரிபாகங்கள் சென்னை, ஒசூர் மற்றும் வட இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்குள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கோவையில் உள்ள பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு ஜாப் ஆர்டர் கொடுத்து தங்களுக்கு தேவையான உதிரிபாகங்களை பெற்று வருகின்றன.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக ஜாப் ஆர்டர்கள் பெருமளவு குறைந்து விட்டதாக சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நல்வாழ்வு சங்க தலைவர் சுருளிவேல், டேக்ஸ் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் ஆகியோர் கூறியதாவது:-
சென்னை, ஓசூர், டெல்லி, மராட்டியம், பஞ்சாப் ஆகிய இடங்களில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு கோவையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தான் உதிரிபாகங்களை தயாரித்து வருகின்றன. ஒரு மாதத்துக்கு ரூ.300 கோடி அளவிற்கு உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அந்த ஜாப் ஆர்டர் அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த 3 மாதங்களாக வாகன தயாரிப்பு நிறுவனங்களில் 40 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய 60 சதவீத ஜாப் ஆர்டர்கள் குறைந்து விட்டன. முன்பு 3 ஷிப்டுகளில் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். ஆனால் இப்போது ஒரு ஷிப்டில் தான் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியவில்லை. இந்த நெருக்கடி காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.
வாகனங்களை தயாரிக்கும் பெரிய நிறுவனங்களிடமிருந்து ஜாப் ஆர்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. வட்டி கூட செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளின் வங்கி கடனை திருப்பி செலுத்துவதற்கு காலக்கெடுவை நீட்டித்து தர வேண்டும். இல்லையென்றால் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.