ஊழல் குற்றச்சாட்டு இன்றி அரசை நடத்துவதாக பாராட்டு: மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முதல்-மந்திரி வேட்பாளர் பட்னாவிஸ் அமித்ஷா அறிவிப்பு
மராட்டிய சட்டசபை தேர்தலை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் சந்திக்க இருப்பதாக பா.ஜனதா தலைவர் அமித்ஷா அறிவித்தார்.;
மும்பை,
இந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. இதேபோல எதிர்க்கட்சிகளான காங்கிரஸ்- தேசியவாத காங்கிரசும் கூட்டணி அமைத்துள்ளன. பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடியும் தனித்து போட்டியிடும் என தெரிகிறது.
அடுத்த மாதம் (செப்டம்பர்) தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் அறிவிக்கப்படாத தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டன. ‘ஜன் ஆசிர்வாத்‘ என்ற பெயரில் சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே மாநில சுற்றுப்பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ‘மகா ஜனாதேஷ்’ என்ற பெயரில் ரத யாத்திரையை கடந்த 1-ந் தேதி தொடங்கினார். மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அவர் ரத யாத்திரையை கடந்த 6-ந் தேதி தற்காலிகமாக ஒத்தி வைத்து நிவாரண பணிகளை முடுக்கி விட்டார். இந்த நிலையில் மீண்டும் அவர் வருகிற 21-ந் தேதி முதல் ரத யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார்.
இதுபோல காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் மாநில சுற்றுப் பயணத்தை தொடங்கி விட்டனர். இதனால் மராட்டிய தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.
இந்த நிலையில் பா.ஜனதாவின் அடுத்த முதல்-மந்திரி வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நேற்று முற்றுப்புள்ளி வைத்தார்.
அரியானா மாநிலத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் அமித்ஷா பேசும்போது, “அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார், மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ஜார்கண்ட் முதல்-மந்திரி ரகுபர்தாஸ் ஆகியோரே தங்கள் கட்சியின் அந்தந்த மாநில முதல்-மந்திரி வேட்பாளர்களாக இருப்பார்கள். அவர்களின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியின் செயல்பாடுகளே எங்கள் கட்சியின் முக்கிய தேர்தல் பிரசாரமாக இருக்கும்” என்றார்.
இதுகுறித்து கட்சியின் மேலிட தலைவர் ஒருவர் கூறியதாவது:-
மராட்டியத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 5 ஆண்டுகளாக ஊழல் இல்லாத, நேர்மையான ஆட்சியை நடத்தி வருகிறார். இதேபோல அரியானா, ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரிகளும் ஊழல் பிரச்சினைகளில் சிக்கவில்லை. எனவே 3 மாநில முதல்-மந்திரிகள் மீது மக்களுக்கு செல்வாக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர்களையே இந்த தேர்தலில் முதல்-மந்திரி வேட்பாளர்களாக நிறுத்த கட்சி முடிவு செய்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான 370-வது சட்டப்பிரிவை நீக்கியதால் பிரதமர் மோடிக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் தேர்தலில் மேற்கண்ட 3 மாநிலங்களிலும் மீண்டும் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.மராட்டியத்தில் கடந்த முறை சட்டமன்ற தேர்த லில் முதல்-மந்திரி வேட் பாளரை அறிவிக்காமல் பா.ஜனதா தேர்தலை சந்தித்தது. பா.ஜனதா வெற்றி பெற்றதை அடுத்து, மாநில பா.ஜனதா தலைவராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இந்த தடவை பா.ஜனதா தனது முதல்-மந்திரி வேட்பாளரை அறிவித்து தேர்தலை சந்திக்கிறது.
சிவசேனா சம்மதிக்குமா?
கூட்டணி வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவியை கையகப்படுத்த சிவசேனா முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பா.ஜனதா கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் தேவேந்திர பட்னாவிஸ் என்று அமித்ஷா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை சிவசேனா ஏற்குமா? என்று தெரியவில்லை.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே, சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பான ஒப்பந்தமும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்-மந்திரி பதவி ஏற்பார் என்று சில பா.ஜனதா மந்திரிகள் சமீபத்தில் கூறியபோது, தேர்தல் கூட்டணி பற்றி நாங்கள் பேச வேண்டிய இடத்தில் பேசி விட்டோம் என்று அவர்களுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்தார். ஆனால் கூட்டணி தொடர்பாக என்ன பேசினார்கள் என்பதை இரு கட்சிகளும் இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.