25 நாட்களுக்கு பிறகு கர்நாடக மந்திரிசபை நாளை விரிவாக்கம் சுயேச்சை எம்.எல்.ஏ. உள்பட 14 பேர் மந்திரிகளாக பதவி ஏற்கிறார்கள்

25 நாட்களுக்கு பிறகு கர்நாடக மந்திரிசபை நாளை (செவ்வாய்க்கிழமை) விரிவாக்கம் செய்யப்படுகிறது. சுயேச்சை எம்.எல்.ஏ. உள்பட 14 பேர் மந்திரிகளாக பதவி ஏற்கிறார்கள்.

Update: 2019-08-18 23:25 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கூட்டணி ஆட்சி கடந்த மாதம் (ஜூலை) 23-ந்தேதி கவிழ்ந்தது. இதைதொடர்ந்து முதல்-மந்திரியாக எடியூரப்பா கடந்த மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றார். அவருடன் மந்திரிகள் யாரும் பதவி ஏற்கவில்லை. இதனால் மந்திரிசபையில் எடியூரப்பா ஒருவர் மட்டுமே இருக்கிறார்.

இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக குறை கூறி வருகின்றன. வட கர்நாடகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தின்போது, மந்திரிகள் இல்லாததால், நிவாரண பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்த நிலையில் டெல்லி சென்ற எடியூரப்பா, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து மந்திரிசபை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் வாங்கியுள்ளார். கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் 20-ந் தேதி (நாளை) நடைபெறும் என்று எடியூரப்பா ஏற்கனவே அறிவித்தார். இதுகுறித்து கவர்னர் வஜூபாய் வாலாவிடம் எடியூரப்பா அனுமதி கோரினார். அதற்கு கவர்னர் அனுமதி வழங்கியுள்ளார்.

அதன்படி கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடக்கிறது. 25 நாட்களுக்கு பிறகு இந்த மந்திரிசபை விரிவாக்கம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுயேச்சை எம்.எல்.ஏ. நாகேஷ் உள்பட 14 பேர் மந்திரிகளாக பதவி ஏற்கிறார்கள். இன்னொரு சுயேச்சை எம்.எல்.ஏ. சங்கர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை.

மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்திக்கு உள்ளாகும் எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கி சமாதானப்படுத்த எடியூரப்பா முடிவு செய்துள்ளார். மந்திரிசபையில் 17 இடங்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்காக காலியாக வைக்கப்படுகிறது.

தகுதி நீக்கத்தை எதிர்த்து 17 எம்.எல்.ஏ.க்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீது விசாரணை முடிந்து, தீர்ப்பு அவர்களுக்கு ஆதரவாக வந்தால் மந்திரிகளாக பதவி ஏற்பதில் சிக்கல் இருக்காது. ஒருவேளை சபாநாயகரின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தால், தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 2023-ம் ஆண்டு வரை சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியாது.

17 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அந்த தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களை பா.ஜனதா சார்பில் நிற்க வைக்க திட்டமிட்டுள்ளனர். எக்காரணம் கொண்டும் தங்களின் தொகுதியை குடும்பத்தினரை தவிர வேறு நபர்களுக்கு விட்டுக்கொடுக்க அவர்கள் தயாராக இல்லை என்றே சொல்லப்படுகிறது.

இடைத்தேர்தலில் அவர்களின் குடும்பத்தினர் வெற்றி பெற்று வந்தால், மந்திரி பதவி வழங்க எடியூரப்பா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் மந்திரிசபையில் காலியாக வைக்கப்படும் இடங்கள் குறைந்தது 6 மாத காலத்திற்கு நிரப்பப் படாது என்றே தெரிகிறது.

மேலும் செய்திகள்