ஒகேனக்கல் அருகே, தொழிலாளியை சுட்டுக்கொன்றவர் குண்டர் சட்டத்தில் கைது

ஒகேனக்கல் அருகே, தொழிலாளியை நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.;

Update: 2019-08-18 22:45 GMT
பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் ஜருகு பகுதியை சேர்ந்தவர் பாலு. இவருடைய மகன் முனுசாமி (வயது 25). கூலித்தொழிலாளி. இவர், தனது உறவுக்கார பெண்ணுடன் கடந்த மே மாதம் 1-ந் தேதி ஒகேனக்கல் சென்றார். பின்னர் வீடு திரும்பிய அவர்கள் ஒகேனக்கல் வனப்பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது ஒகேனக்கல் மடம் இருளர் காலனியை சேர்ந்த செல்வம் (40) என்பவர் அங்கு சென்றார். அங்கு முனுசாமிக்கும், செல்வத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த செல்வம் தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் முனுசாமியை சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் தொழிலாளியை சுட்டுக்கொன்ற செல்வத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் கலெக்டர் மலர்விழிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கொலை வழக்கில் தொடர்புடைய செல்வத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து ஒகேனக்கல் போலீசார் ஏற்கனவே சிறையில் உள்ள செல்வத்திற்கு குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை வழங்கினர்.

மேலும் செய்திகள்