சாத்தான்குளத்தில் மகனை கத்தியால் குத்திய தந்தை கைது
சாத்தான்குளத்தில் மகனை கத்தியால் குத்திய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
சாத்தான்குளம்,
சாத்தான்குளம் தச்சமொழி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). மாட்டு இறைச்சி வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி சமுத்திரக்கனி. இவர்களுடைய மகன் முருகன் (28). ஆறுமுகத்திற்கும், சமுத்திரக்கனியின் தங்கையான அதே பகுதியை சேர்ந்த சங்கரம்மாள் என்பவர் குடும்பத்துக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சமுத்திரக்கனி, முருகன் ஆகியோர் சங்கரம்மாளிடம் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ஆறுமுகம் வந்தார்.
அவர், மனைவி மற்றும் மகனை கண்டித்தார். இதில் அவர்களுக்கும் ஆறுமுகத்திற்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் தான் வைத்து இருந்த கத்தியால் முருகனை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த முருகன் சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தார்.