2-ம் நாளாக விடிய, விடிய மழை: செண்பகத்தோப்பு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

2-ம் நாளாக விடிய, விடிய மழை பெய்ததால் கண்ணமங்கலம் அருகே உள்ள செண்பகத்தோப்பு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2019-08-18 21:30 GMT
கண்ணமங்கலம்,

திருவண்ணாமலை அக்னி ஸ்தலம் என்பதற்கு ஏற்ப கோடை காலத்தில் வெயில் வெளுத்து வாங்கியது. மழை வருமா? என்று மக்கள் ஏங்கி தவித்தனர். தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டம் குறைத்து வறட்சியும் ஏற்பட தொடங்கியது. கடந்த மாதத்தில் அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்தது. கடந்த 16-ந் தேதி இரவு முதல் நேற்று முன்தினம் காலை வரை பலத்த மழை பெய்தது. இதையடுத்து பகலில் சில பகுதியில் லேசான சாரல் மழை பெய்து உள்ளது.

பின்னர் மதியத்திற்கு மேல் மழை பெய்யவில்லை. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இரவில் பரவலாகவும், நேற்று பகலில் சுமார் 1 மணி வரை லேசான சாரல் மழையாகவும் பெய்தது.

இந்த தொடர் மழையினால் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையினால் கொசு தொல்லை தற்போது அதிகரித்து உள்ளது. கொசுக்களில் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்ணமங்கலம் அருகே படவேடு ஜவ்வாது மலை அடிவாரத்தில் கமண்டல நதி குறுக்கே செண்பகத்தோப்பு அணை உள்ளது. கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் தற்போது சுமார் 26 அடி வரை தண்ணீர் நிரம்பி உள்ளது. தொடர்ந்து இந்த மழை நீடித்தால், ஷட்டர் வரை சுமார் 45 அடி தண்ணீர் நிரம்பும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த அணையில் விரைவில் ஷட்டர் பழுதுபார்த்து முழு கொள்ளளவு நிரம்ப பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

119 அடி கொள்ளளவு கொண்ட சாத்தனூர் அணையில் 67.85 அடியும், 60 அடி கொள்ளளவு கொண்ட குப்பநத்தம் அணையில் 29.85 அடியும், 22.97 அடி கொள்ளளவு கொண்ட மிருகண்டா அணையில் 0.33 அடியும் தண்ணீர் உள்ளது.

இந்த அணையின் நீர், கசிவு காரணமாக கமண்டல நதியில் லேசான தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் பலத்த மழையின் காரணமாக திருவண்ணாமலை செல்லும் மெயின் ரோட்டில் முனியந்தாங்கல் என்ற இடத்திலும், சந்தவாசல் ஆரணி மெயின் ரோட்டில் சாலையோரம் இருந்த 2 புளிய மரங்கள் சாய்ந்தன. பின்னர் அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் புளியமரங்களை வெட்டி அகற்றினர். இதையடுத்து போக்குவரத்து சீரானது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கீழ்பென்னாத்தூர்- 50.4, செய்யாறு - 42, போளூர்- 39, சேத்துப்பட்டு- 36.6, திருவண்ணாமலை- 28.8, வந்தவாசி- 25.2, செங்கம்- 20.7, சாத்தனூர் அணை- 19.6, கலசபாக்கம்- 17, ஆரணி- 16.2, தண்டராம்பட்டு- 15.8, வெம்பாக்கம்- 15. 

மேலும் செய்திகள்