ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் ஓட்டை பிரித்து 48 பவுன் நகைகள், ரூ.46 ஆயிரம் கொள்ளை

ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் ஓட்டை பிரித்து 48 பவுன் தங்க நகைகள், ரூ.46 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-08-18 23:00 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் தனது மனைவி மலர்ஜோதியுடன் பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ஓட்டுவீட்டில் வசித்து வருகிறார். கடந்த வாரம் மனைவி மலர்ஜோதிக்கு கண் அறுவை சிகிச்சைக்காக சென்னை சென்று உள்ளார்.

இந்த நிலையில் இளங்கோவனின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் நேற்று இளங்கோவனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, உங்களது வீட்டில் குரங்குகள் சென்று வருகின்றன என்று கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளங்கோவன் உடனே வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் மேற்கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகை- பணம் கொள்ளை

பின்னர் வீட்டின் சாமி அறையில் பார்த்தபோது, அங்கு இருந்த இரும்பு பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த 48 பவுன் தங்க நகைகள், ரூ.46 ஆயிரம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து செந்துறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதையடுத்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்