ஆசனூர் அருகே செல்பி எடுக்க முயன்றவரை தூக்கி வீசிய யானை; படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி

ஆசனூர் அருகே செல்பி எடுக்க முயன்றவரை யானை தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2019-08-18 23:00 GMT
தாளவாடி,

ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 36). இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் காரில் ஈரோட்டில் இருந்து ஆசனூர் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தார். ஆசனூர் அருகே உள்ள திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி அளவில் சென்றபோது நடுரோட்டில் ஒரு யானை நின்று கொண்டிருந்ததை பார்த்தனர்.

இதனால் அவர்கள் காரை நிறுத்தினர். பின்னர் ஞானசேகரன் மட்டும் காரில் இருந்து இறங்கினார். தனது செல்போனை எடுத்து யானையின் அருகே சென்று செல்பி எடுக்க முயன்றார். அப்போது ஆவேசம் அடைந்த யானை துதிக்கையால் ஞானசேகரனை தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல், “அய்யோ, அம்மா” என்று சத்தம் போட்டார்.

உடனே காரில் இருந்த அவருடைய நண்பர்கள் காற்று ஒலிப்பானை அழுத்தினார்கள். இதேபோல் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிலரும் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன்பின்னர் படுகாயம் அடைந்த ஞானசேகரனை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்