சடையநேரி கால்வாயில் தடுப்புச்சுவர் கட்டுவதை நிறுத்த வேண்டும்: வெள்ளையன் பேட்டி
சடையநேரி கால்வாயில் தடுப்புச்சுவர் கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று வெள்ளையன் தெரிவித்து உள்ளார்.
மெஞ்ஞானபுரம்,
மெஞ்ஞானபுரம் நங்கைமொழி அருகே உள்ள சடையநேரி குளத்திற்கு தண்ணீர் வரும் சடையநேரி கால்வாயில் பிரிவினை தடுப்புச்சுவர் அமைக்கப்பட உள்ளது.
அவ்வாறு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டால் அதிக அளவிலான தண்ணீர் புத்தன்தருவைகுளத்திற்கு செல்லும். ஆனால் சடையநேரி கால்வாய்க்கு தண்ணீர் வராது. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் பிரிவினை தடுப்புச்சுவர் அமைக்கப்பட உள்ள இடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
சடையநேரி கால்வாயில் தடுப்புச்சுவர் கட்டுவது தேவையற்ற வேலை. இதனால் சடையநேரி குளத்தை நம்பி இருக்கும் பல விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். புத்தன்தருவை பகுதியில் அவ்வளவு விவசாய நிலங்கள் இல்லை. எனவே இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சடையநேரி கால்வாய் பம்புசெட் விவசாய சங்க தலைவர் ஆதிலிங்கம், உடன்குடி வியாபாரிகள் சங்க தலைவர் ரவி, உடன்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாலசிங், ஆம் ஆத்மி குணசீலன் மற்றும் விவசாயிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.