பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை: பெங்களூரு, மைசூரு நகரங்கள் உள்பட மாநிலம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு

பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து பெங்களூரு, மைசூரு நகரங்கள் உள்பட கர்நாடகம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பஸ், ரெயில் மற்றும் விமான நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2019-08-18 00:31 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும்.

அதேபோல் கடந்த 15-ந் தேதியும் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சுதந்திர தின கொண்டாட்டம் முடிவடைந்த போதிலும் பெங்களூரு உள்பட முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்படவில்லை.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் பெங்களூருவில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டது. இது குறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயங் கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கைப்படி பெங்களூருவில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது” என்றார்.

இதையடுத்து பெங்களூருவில் உள்ள பஸ், ரெயில், மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதே நிலை 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. பெங்களூரு நகரில் உள்ள விதானசவுதா, விகாசசவுதா, கர்நாடக ஐகோர்ட்டு ஆகிய இடங்களில் வழக்கத்தைவிட அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விதானசவுதா, விகாச சவுதாவுக்குள் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மட்டும் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் மெஜஸ்டிக்கில் உள்ள சிட்டி ரெயில் நிலையம், பி.எம்.டி.சி. மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சிட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் ரெயில்களில் மோப்பநாய்கள் மற்றும் ‘மெட்டல் டிடெக்டர்‘ கருவிகள் கொண்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதுபோல் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலும் பாதுகாப்பு பணியில் அதிகமான போலீசார், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். பஸ், ரெயில் மற்றும் விமான நிலையங்களில் வரும் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் போலீசார் தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகிறார்கள்.

இதுதவிர பெங்களூரு நகரில் உள்ள வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள், முக்கிய வழிப்பாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். ஓட்டல்கள், தனியார் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

அத்துடன் சாலைகளில் போலீசாருடன் சேர்ந்து ‘கருடா’ படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பெங்களூரு நகரில் பாதுகாப்பு பணியில் போலீசார், கர்நாடக ரிசர்வ் படை போலீசார், நகர ஆயுதப்படை போலீசார், ‘கருடா’ படையினர், ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, நேற்று பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ், கூடுதல் போலீஸ் கமிஷனர்கள், துணை போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுடன் தனது அலுவலகத்தில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது பெங்களூரு மாநகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டு அறிந்தார். மேலும் பாதுகாப்பில் குறைகள் இன்றி செயல்பட வேண்டும். ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டை உறுதி செய்து கொள்ள வேண்டும். முக்கிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும் ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள நிலவரம் குறித்து ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை தகவல் அளிக்க வேண்டும் என்று அவர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த கூட்டத்துக்கு பிறகு பாஸ்கர்ராவ் நிருபர்களிடம் கூறுகையில், “பெங்களூரு மாநகரில் போடப்பட்டு இருக்கும் பாதுகாப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து முன் எச்சரிக்கையாக இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விதானசவுதா, விகாச சவுதா, பஸ், ரெயில், மெட்ரோ ரெயில் நிலையங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம். சந்தேகப்படும் படியாக இருக்கும் நபர்கள் மற்றும் பொருட்களை பார்த்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

இதுதவிர மைசூரு, மண்டியா, தட்சிணகன்னடா, உடுப்பி, சிக்கமகளூரு, பெலகாவி, விஜயாப்புரா உள்பட மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் கர்நாடகம்-தமிழக எல்லை, கர்நாடகம்-மராட்டிய எல்லை, கர்நாடகம்-ஆந்திரா எல்லை, கர்நாடகம்-கேரள எல்லைகளிலும் போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூ உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் மைசூரு, மங்களூரு, உடுப்பி, உப்பள்ளி, கலபுரகி உள்ளிட்ட நகரங்களிலும், அங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மைசூரு அரண்மனை, மிருகக்காட்சி சாலை, மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கட்டு மற்றும் பஸ், விமான நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். வெடிகுண்டுகள் இருக்கிறதா? என்பதை மோப்பநாய்கள் மற்றும் ‘மெட்டல்டிடெக்டர்‘ கருவிகள் மூலம் போலீசார் சோதனையிட்டு வருகிறார்கள். 

மேலும் செய்திகள்