எனது வாழ்க்கையின் முக்கிய கட்டங்கள் வீணாகி விட்டன - நாராயண் ரானே வேதனை
தனது வாழ்க்கையின் முக்கிய கட்டங்கள் வீணாகி விட்டதாக நாராயண் ரானே வேதனை தெரிவித்தார்.
மும்பை,
மகாராஷ்டிரா சுவாபிமானி கட்சி தலைவரான நாராயண் ரானே, தற்போது பா.ஜனதா சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார். இவர் சிவசேனா கட்சியில் இருந்த போது முதல்-மந்திரி பதவி வகித்தார். கட்சியில் உத்தவ் தாக்கரேயின் செல்வாக்கு மேலோங்கியபோது, அதற்கு அதிருப்தி தெரிவித்ததால் முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் காங்கிரசில் இணைந்தார். காங்கிரசில் அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அதனை அக்கட்சி நிறைவேற்றவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த நாராயண் ரானே கடந்த 2017-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி தற்போது மகாராஷ்டிரா சுவாபிமானி கட்சியை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நாராயண் ரானே எழுதிய சுயசரிதை புத்தக வெளியிட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், “நாராயண் ரானே சிவசேனாவில் இருந்து விலகியபோது அவருக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று காங்கிரசில் சேருவது. மற்றொன்று தேசியவாத காங்கிரசில் சேருவது. ஆனால் அவர் காங்கிரசில் சேர்ந்தார். அது தவறா? அல்லது கவனக்குறைவா என்று எனக்கு தெரியவில்லை“ என்றார்.
மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறுகையில், “மாநிலத்தில் சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசு இருந்தபோது நானும், நாராயண் ரானேயும் மந்திரிகளாக பதவி வகித்தோம். பின்னாட்களில் நான் மேல்-சபை எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினேன். அப்போது நாராயண் ரானே சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அவரை காங்கிரசில் சேர வேண்டாம் என்று நான் கேட்டுக்கொண்டேன். அன்று அவர் காங்கிரசில் சேராமல் இருந்து இருந்தால், மாநில அரசியல் காட்சி வேறு மாதிரியாக அமைந்து இருக்கும்“ என்றார்.
பின்னர் நாராயண் ரானே பேசியதாவது:-
நான் எம்.எல்.ஏ. ஆன போது மந்திரியாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன்படி மந்திரி ஆனேன். மந்திரியான பிறகு முதல்-மந்திரி ஆக விரும்பினேன். அதுவும் நடந்தது. தற்போது நான் எம்.பி.யாக இருக்கிறேன். அது விருப்பத்துக்கு எதிரானது அல்ல. ஆனால் எனது வாழ்க்கையின் முக்கிய கட்டங்கள் வீணாக போய் விட்டதாக உணருகிறேன். தற்போது கூட எனது நேரம் வீணாகி கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.